Saturday, October 4, 2014

வராலாறு - 5 இரசமணி -- 2

                           பாரம்பரிய சித்த மருத்துவம் – தொகுதி-5
                            உள்ளடக்கம்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 (1)முன்னுரை (2) உலகவாதிகள் (3) போகர் பாடல் (4) சட்டை முனி பாடல் (5) யாகோப்பு பாடல்  (6) காகபுசுண்டர் பாடல்   (7) அகஸ்த்தியர் ரசக்குளிகை (8) முடிவுரை.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
முன்னுரை :-
           நீங்கள் இதுவரை சென்ற பகுதியில் இரசமணியின் ஒரு பரிமாணக் கருத்துக்களைப் பற்றி படித்து வந்தீர்கள். இதில் சித்தர்கள் மனித உடலில் உள்நோக்கி செயல்படும் இரசமணி பற்றிக் கூறிய கருத்துக்களை பார்ப்போம். சித்தர் நூல்களின் ஆதார அமைப்பே இரசமணி, முப்பு, கற்பம், வாதம், யோகம் என்பதுவே. இவ்வித கருத்துக்களில் ஆசை கொண்ட பலர் தங்கள் வாழ்நாளில் இதற்காக செலவிட்டவர் பலராவர் இவர்களில் பலர் வெற்றி பெற்று இருக்கலாம், எண்ணற்றவர் முடிவு காணாது சென்றவர்கோடி என்றால் மிகையல்ல. இத்தகைய கருத்துக்களை சித்தர்கள் கூறிச்சென்று, இருக்காவிட்டால் சித்த மருத்துவத்தைக்  கற்றுக் கொள்ளும் ஆர்வம் இருந்து இருக்காது இதுகருதியே வாதி மகன் வைத்தியன் என்ற சொல்லும் பிறந்து. மனிதனுக்கு பொருள் தேடவேண்டும் என்பது அனைவருக்கும் ஏற்படும் ஆசைதான் இதிலும் தங்கம் செய்யலாம் தாழ்ந்த உலோகங்களை மாற்றி உயர்ந்த லோகமாகச் செய்வதை தெரிந்து கொள்வது என்றால் யார்தான் வேண்டாம் என்பார்கள். விண்ணில் பறக்கவேண்டும், பல அறிய சக்திகளை பெறவேண்டும் இதற்கான வழிமுறைகள் சித்தர் நூல்களில் உள்ளது என்றால் மானிதன் விடுவானா உடன் அவனது ஆய்வுகள் எளிதில் சென்றடையும் சித்தர் நூல்களில். இதனால் இவன் தங்கம் செய்கிறானோ இல்லையோ மருத்துவனுக்கங்க்களை மருந்து செய்முறைகளில் புடமிடுதல் போன்ற வகைகளில் தேர்ச்சி பெற்றுவிடுவான். இதையெல்லாம் அருகிருந்து பார்க்கும் அவனுடைய மகனுக்கு எளிதில் புரியும்  எனவேதான் வாதி மகன் வைத்தியன் என்று கூறினர்.
          சித்தர் நூல்களில் புறத்தில் செய்யப்படும்  செயல் பாடுகள் பற்றிக் சொல்லி வருவார்கள் அவ்வாறு மருந்து செய் முறைகளில் இருந்து சித்தாந்த,வேதாந்த கருத்துக்களுக்கும், அதில் இருந்து முப்பு, கற்பம், ரசமணி என்று மாறி மாறி சென்று விடுகின்றனர். இதில் இருந்து பொருள் காண்பது என்பது கடினமாகும். இரசமணி பற்றி சித்தர்கள் பலவிதமாக சொல்லியுள்ளார்கள்.இதில் நான் சென்ற தொகுதியில் கூறிய கருத்துக்களைப் போல் இரசமனிகள் பற்றிக் சொல்லிவருவது போல் நம் உடலில் ரசமணி பற்றியும் சொல்லியுள்ளனர். எனவே நாம் புறம், அகம்  என்று இரண்டாகப் பிரித்து முன் புறத்தில் செய்யப்படும் ரசமணிகளைப் பார்த்தோம்.இனி அகத்தினில் ரசமணி பற்றிப் பார்ப்போம். நம்மவர்களிடையே ஒருமித்தகருத்துக் கொள்வார் சிலர். சிலமாற்றுக் கருத்துடையோரும் இருப்பார். போகர் – 7000, த்தில் 2- வது காண்டத்தில் 179- பக்கம் 116-ம் பாடலில் உலகவாதிகள் என்ற தலைப்பில் சொல்லியுள்ளதைப்  பார்ப்போம்.



















உலகவாதிகள் :-
ஆமென்ற வுலகத்தோர் வாதந்தேடி
ஆராய்ந்து சரக்குகளைப் பார்த்து பார்த்து
போமென்றுஇதனாலே சீவனங்கள் பண்ணிப்
புல்லர்கள் தாநெட்டுபேர் பத்துபேர் கூடி
காமென்ற யோசனைதான் மிகவும் பண்ணிக்
கலந்து நின்ற சாத்திரத்தில் மறைத்துப் போட்டார்
நாமென்ன செய்ய நீரில் பார்பதென்று
நலமாகச் சாறுவிட்டு அரைப்பார் பாரே
பாடல் – 116
அரைத்துமேபுடம் போட்டு பணியில் வைத்து
ஆகாகா செயநீர் தானாச்சு தென்பார்
நிறைத்துமே புடம்போட்டுச் சரக்கைகட்டி
நேராக வாச்சுதென்று லோகத்திய்ந்து
கரைத்துமே செம்பையிட்டுக் காரீயம்குத்தி
கசடகற்றி யூதியது யுரைத்துப் பார்த்து
மறைத்துமே நால்மாற்று ஆச்சுதென்று
மயங்குவார் உலகத்துச் சண்டிதானே
                                :- பாடல் 117
சண்டிகள்தான் மெத்தவுண்டு வுளுத்தமான்பர்
தரு குரும்பனத்தில் ஒருவன் பொன்னைச் சேர்த்து
மன்டியே கடைதனிலே உரைத்துக்காட்டி
மனது நொந்து புண்ணாகிப் போட்ட பொன்போய்
தண்டியே ஒருகாசுரண்டுகாசு சார்பாகப்
பின்னொன்று பார்ப்போம் என்று
மன்டியே நான்போட்டேன் நீபோட்டேன்று
மயிர்பிடித்துச் சண்டையிட்டு வழக்கம்பாரே
வழக்கிட்டுச் சண்டைகொண்டு பின்
னொருவன் வந்து வாதியொரு பரதேசிவந்தான்ப்பா
வழக்கிட்டு தொழில்செய்து கடையில் விற்றான்
நான்பார்த்தேன் வேகுசுளுவு நீயும்பாரு
அமுக்கிட்டு ஒன்றோடே ஒன்றைச் சேர்த்து
அமர்த்தியவர் புடம்போடப் புகைந்துபோயி
பழுக்கிட்டுயிப்படியே சாகுமட்டும்
புலம்பி இறந்துண்டவர்கள் கோடியாமே
                            :- பாடல் 119
     இவ்வாறு உலகத்தில் மனிதர்கள் பேராசையின் காரணமாக நூல்களின் உட்பொருள் புரியாமலும் சீர்தூக்கி ஆய்வு செய்து பார்க்காமலும் தன் அறிவு கொண்டு இது நடைமுறைச் சாத்தியமா என்று பாராமல் பொன்,பொருளையும் காலத்தையும் வீனாககழித்து நொந்து இறப்பார்கள்.இனி போகர் 700, என்னும் நூலில் உள்ள ஒரு பாடலில் இருந்து அகரசமணி பற்றி பார்ப்போம்.
போகர் பாடல் :-  
கல்லான காயசித்தி கற்பமொடுரசவாதம்
அஞ்சான குளிகை கல்லான கெளனமாங்குளிகையோடு
கனமான சர்வநோய் எல்லாம் மைந்தா
சொல்லான சூதத்தை விட்டால் வேறு
சொல்லுக்கும் வல்லவரார் சொல்லக்கேளு
சொல்லவே சித்தர்கள் தான் பதிநென்பேரும்
சிவவிந்தை கட்டியல்லோ திறமானாரே
:- போகர் -700
போகர் இப்பாடலில் காயசித்திக்கான கற்பம், தங்க்ம்செய்வதர்க்கான இரசவாத முறைக்கும் கெளனமார்க்கத்தில் செல்வதற்கான குளிகை (மணி) உடலில் தோன்றும் நோய்கள் எல்லாம் தீர வென்றால் சூதத்தை விட்டால் வேறு இல்லை இதற்கு மாற்றுக் கூற வல்லார்கள் யார் உள்ளார் என்று கூறி அடுத்துக் கூறுகிறார் 18- சித்தர்களும் சிவவிந்தைக் கட்டியல்லோ சித்தி பெற்றனர் என்று கூறுகிறார். மேற்கண்ட சூதத்திற்கு சிவம் என்ற பெயரும் உள்ளதால் சிவன் விந்து என்றும் அதைக் கட்டி திறம் பெற்றனர் என்றும் பொருள் படுகிறது. இவ்வறிய செயல்கள் சாதரணமான கடையில் விற்கும் ஒரு பொருளுக்கு இருக்குமா இதுபற்றி சட்டைமுனி தன் வாத காவியத்தில் சொல்லுவதைப் பார்ப்போம்.















சட்டை முனி பாடல் :-
விந்துவென்ற சூதத்தில் மந்திரமோ சித்தி
மேகத்திலோடுகின்ற குளிகை சித்தி
அந்து மென்ற யோகமுதல் ஞான சித்தி
அப்பனே காயசித்தி லோகசித்தி
சாஸ்திரத்தில் சொல்லாத கருவோசித்தி
விந்து கொண்ட வாதத்திலட்டாங்க சித்தி
பாரப்பா சூதத்தைக் கட்டினோர்க்கே
                              :- சட்டமுனி வாத காவியம் -1000
இவரது பாடலில் விந்து என்று சொல்லும் சூதத்தினால் மந்திரம், குளிகை, ஞானம், யோகம், காயம், அட்டாங்க சித்திகள் எல்லாம் இந்த சூதமாகிய விந்தினைக் கட்டினவர்க்கு என்று கூறுகிறார். அப்படியானால் ரசமணி பற்றி புறப்பகுதியில் சொல்லிய படி கட்டிவிட்டால் சித்தியாகி விடுமா? அணிமாதி சித்தி எனப்படும் எண்வகை சித்திஎல்லாம் மேற்கண்ட ரசத்தால் சித்தி என்றால் எளிதாகத்தானே உள்ளது. சித்தர்கள் இவ்வளவு அறிய செயல்களுக்கு காரணமானதை இவ்வளவு எளிதில்  சொல்லியிருப்பார்களா நாம் சிந்திக்க வேண்டும். யாக்கோபு என்னும் சித்தர் சொல்லுவதை பார்த்தால் கருத்து மாறுபடுவதைக் காணலாம்.














யாகோப்பு பாடல் :-
கண்டு கொள்ளு நினைத்த தெல்லாம் கைகொடுக்கும்
கதியாகும் விதியாகும் சித்தியாகும்
பண்டுமுன்னே இருந்த தெல்லாம் பாகமாகும்
தொண்டுபடும் சகலமும்தான் பாரிலோர்க்கு
தொல்லுலகில் விந்திறுகும் தொன்மைபாரு
உண்மேல் ஸ்திரிகளுந்தான் வசியமாகும்
உற்றுனர்ந்து பார்த்தாக்கால் சித்தியாமே
                           :- யாகோப்பு சுண்ணம் – 300
மேற்கண்ட பாடலை பார்த்தால் நினைத்த தெல்லாம் சித்தியாகும் இதுவே விதியாகும் முன்பு தெரியாதது எல்லாம் தெரியும் சகலமும் சித்தியாகும் இதனால் சுக்கிலாமானது இறுகும் இதனால் பெண்கள் வசியப்படுவர் என்று கூறியவர் உற்று சிந்தையில் உணர்ந்து பார்த்தல் எல்லாம் சித்தியாமே என்று சொல்லுகிறார் அப்படியானால் சென்ற தொகுதியில் பலவித ரசமனிகள் செய்முறைகள் கூறி இருந்தேன் அதில் ஒன்றை செய்து உற்றுப்பார்த்தால் இவ் அரிய காரியங்கள் சித்தியாகிவிடுமா என்றால் நிச்சயமாக இவர்கள் சொல்வது வேறு பொருளாகத்தான் இருக்கவேண்டும் இனி காகபுசண்டர் என்னும் சித்தரின் சொல்லைப் பார்ப்போம்





















காக புசுண்டர் -- 
கேளப்பா கேசரமே அண்டவுச்சி
கெட்டியாய்க் கண்டவர்க்கே மவுனமாகும்
ஆளப்பா பரப்பிரம்ம யோகமேன்று
அடுக்கையிலே போதமுந்தான் உயரத்தூக்கும்
வாளப்பா கெவுனமணி விந்து நாதம்
வலுத்ததடா கெட்டியாய்த் திரண்டுபோகும்
நாளப்பா அண்டமெல்லாஞ் சுத்தியோடும்
நடனமிடும் சிலம்பொலியும் காணலாமே
                             :- காகபுசுண்டர் ஞானம் – 80
இவர் மனத்தை நமது தலையில் உள்ள அண்ட உச்சியை மவுனமாக உறுதி யாக பார்ப்பவர்க்கு விந்துநாதம் திரண்டு போகும் அண்டமெல்லாம் நம் மனதில் சுற்றி வராலாம் நம் காதுகளில் சிலம பொலி கேட்கும் பாரபரையின் நடனம் காணலாகும் இதற்கு பரப்பிரம யோகம் என்று பெயர் அதாவது குண்டலியை சுழிமுனை நாடிவழியாக செலுத்தி செய்யப்படும் பாரபிரமத்துடன் இணைக்கும் செயாலில் போதமும் ( ஞானம் அல்லது அறிவு ) உயரத்தூக்கும் என்று சொல்கிறார் இப்ப்படலின் முலம் சுக்கிலம் கெட்டிப்படும் என்றும் இந்த யோகத்தினால் மனத்தினால் அண்டங்கள் எல்லாம் சுத்தி வரலாம் என்று கூறுகிறார். சரி இனி அகஸ்தியர் ரசக்குளிகை என்னும் பாடல் தொகுப்பில் சொல்லுவதைப் பார்ப்போம்,



















அகஸ்த்தியர் ரசக்குளிகை :-
தானென்ற ஞானிக்கு குளிகைஒன்று
சாற்றுகிறேன் புலத்தியனே சார்ந்துகேளு
தேனன்ற விந்துவல்லோ ரசமாகும்
திரண்டு மணியாவத்ற்கு வகையைக்கேளு
மானென்ற அக்கினியே புடமுமாகும்
ஊநென்ற சடத்திலே மனிபோல்செய்து
உத்தமனே கெவுனத்தில் ஓடலாமே
                                 :- அகஸ்தியர் ரசக்குளிகை – 14—2
ஞானிக்கு குளிகை ஒன்று சொல்லுகிறேன் புலத்தியனே நீ விரும்பிக்கேளு இது உனக்காகச் சொல்கிறேன் நம் உடலில் தேன்போன்று உள்ள விந்துவே ரசமாகும். இது திரண்டு மணியாவதற்கு சொல்லுகிறேன். மனசு என்ற இடமே அக்கினி பீடமாகும். இதில் ஊன் என்று சொல்லும் நம் உடலில் மணிபோல் செய்து உத்தமனே கெவுனத்தில் செல்லலாமே.
ஓடலாம் பராபரத்தினடியிற்குள்ளே
ஓகோகோ சொக்குவிக்கும் மணியின் மார்க்கம்
காடெல்லாந்திரிந்தலைந்து ரசத்தைவாங்கி
கட்டி யொரு மணியாகச் செய்வேனென்று
நாடெல்லாமலை வார்கள் உலுத்தமான்பர்
நாடென்ற வனிடத்தில் நரகமெய்தும்
பாடெல்லாம் பட்டல்லோ விந்தைக்கட்ட
பரப்பிரம மணியாகும் பாருபாரு.
                               :- அகஸ்தியர் ரசக்குளிகை -14-3
இந்த மணியானது மனதை சொக்குவிகும் மதிமயக்கத்தை தரும் அற்புதமாகும் இதன் மூலம் பாராபரத்தை அடையலாம் இதை விட்டு காடுமேடெல்லாம் அலைந்து திரிந்து ரசத்தை வாங்கி கட்டி ரசமணி செய்வேன் என்று நாடெல்லாம் அலைபவர்கள் உளுத்தர்கலாவர். பாடெல்லாம் பட்டல்லோ விந்தைக் கட்டினால் பரப்பிரமணியாகும்
பாரப்பா விந்துவைத்தான் மனியாய்ச்செய்ய
பாடுகிறேன் புலத்தியனே ஐயாகேளு
வீரப்பாவுன்னிடத்தில் வாசி தன்னை
வீரமாகப் பீஜத்துள் அடக்கியேத்து
காரப்பா வாசிதன்னை தம்பஞ்செய்து
காட்டுகிறேன் கபாலத்தில் கண்டுகொள்ளு
வீரப்பா நுனிநாக்கை அன்னாக்கில் மோதி
விளங்குகின்ற தாமர்தன்னையும் அடைத்துபாரே
                                      :- அகஸ்த்திய ரச குளிகை -14-4
புலத்தியனே அய்யா விந்துவைத்தான் மணியாய் செய்யும் வழி சொல்லுகிறேன். உன்னிடத்தில் ஓடுகிற வாசிதனை பீஜத்துள் மனதை வைராக்கியத்துடன் செலுத்தி வாசிதனை தம்பனம் (நிறுத்தி)  செய்து காட்டுகிறேன்.     இதற்க்கு கபாலத்தில் (தலையில்) வாயினுள் உள்ள நாக்கை மடக்கி உள்நாக்கை மோதி அதன் அருகில் இருக்கும் தமர் (ஒட்டையை) அடைத்துப்பார். ( இதில் கூறப்படும் வழிமுறைகளை தகுந்த வழிகாட்டுபவர் இன்றி செய்யவேண்டாம்)
அடைக்கையிலே கும்மென்று யிருட்டுக்கானும்
அலைத்துவிடும் தேகமதை மலைக்கவேண்டாம்
உடைக்கையிலே யவ்விடத்திற் சத்தம்கானும்
ஓங்கி நின்ற சுடரொளியும் கதிரும் வீசும்
படக்கையிலே விழியிரண்டும் அறைக்கன்பாரு
பாரு மூக்கின் சுழிமீதில் குறிப்பாய் பாரு
கடக்கையிலே காலிரண்டும் அசைவுகானும்
கண்டத்தில் ஏழுவாசல்கத வடைக்கும்பாரே
                                   :- அ- ரசக் குளிகை – 14-5
புலத்தியனே இவ்வாறு வாசியை அடக்கும் போது கும்மென்று இருட்டிக் காணும். நம் உடலை அலைக்கழிக்கச் செய்யும் இதற்க்காக பயப்பட வேண்டாம். இவ்வாறு செய்து வருகையிலே காதுகளில் சத்தம் காணும் சுடர் போன்ற ஒளியும் உடல் உஷ்ணப்படும் காலிரண்டும் அசைவுகானும் கண்டத்தில் ( தொண்டையில்- ) ஏழு வாசல் கதவு அடைக்கும் பார்.
பாரப்பாவடைத்துவிடும் வாசலேலும்
பண்பான வாசியது கீழ்நோக்கும்
சேரப்பா வாசியது இறங்கும்போது
சிவ்வென்று சுழிவயிற்றை அழுத்திக் கொள்ளும்
காரப்பா நந்தியுட பீடந்தானே
                                :- அ-ரசக் குளிகை – 14-6
பண்பான புலத்தியனே வாசலானது ஏழும் அடைத்துவிடும் இதனால் சுவாசம் கிழ்நோக்கும் ( காது, மூக்கு, வாய் இவை ஏழுவாசல்கள் ) இவ்வாறு வாசி என்ற சுவாசமானது மேல்வழிகள் அடைபடுவதால் வயிற்றில் இறங்கி குடலில் உலாவ ஆரம்பிக்கும் இதனால் வயிறானது பிரட்டும் இது நந்தி என்று சொல்லப் படுகிற பீடமாகும்.
சுழறவிட வாசியைத்தான் சுழித்துக் கொள்ளும்
ஆரப்பா லிங்கவட்டம் அபானவாசல்
அடைகுமடா நந்தியுட வேகந்தானே
தானென்ற வாசியது பீஜத்தில்செல்லும்
சரிவரவே சென்றபின்பு சொல்லக்கேளு
மானென்ற கபால மெல்லாம் விம்மல் வாங்கும்
மயங்காமல் கெவுனத்தில் உள்ளே செல்லும்
தேனென்றசுடர்கம்பம் கொதிப்புக் கொள்ளும்
சொல்லவென்றால் மயக்கமது காணும் காணும்
                                :- அ-ரசக் குளிகை – 14-7
வாசி என்ற காற்றானது வயிற்றில் சுழன்று லிங்கம் என்ற ஆண்குறி அபான வாயில் என்ற மலத்துவாரங்களின் வழியாக வெளியேற முயலும் அப்போது இவ்விரு வழிகளும் அடைபடுவதால் விரையை அடையும் அங்கு சரிவர செல்லும் போது கபாலம் என்ற தலையானது விம்மிப்புடைக்கும் மயக்கம் உண்டாகும். ( மீண்டும் சொல்கிறேன் இவைகளை விவரம் அறிந்தவர்கள் வழியாக தெரிந்து செய்யவேண்டும் இல்லையேல் மூளையில்அழுத்தம் அதிகரித்து இரத்த தந்துகிகள் கிழிந்து உயிர் அபாயம், மனப்பிதற்றல் தோன்ற வாய்ப்பாகும்.)
ஊனென்ற மவுனத்தால் கம்பத்தோரம்
ஒதுங்கி நீ பீஜத்தில் மனத்தையூனே
ஊணவே வாசியது மேலே நோக்கும்
உள்புகுந்து தண்டுவழி யோடும்பாரு
காணவே சுடர்கம்பங் காண்பதொன்று
காணதற்குள் அஞ்சுதமர் கண்போல் நிற்கும்
எனவே அது வழியே வாசியேறி
ஒடுமடா கமலத்தில் அண்டத்துள்ளே
ஆணவே அமுர்தத்தில் வாசிசிக்கும்
அப்பவல்லோ அக்கினியும் அதிகமாமே
                            :- அ-ரசக்குளிகை -14-8
மேற்கண்டபடி வாசியானத்தை பீஜத்தில் செலுத்த மனத்தைஅதன் வழி செலுத்த வேண்டும் இதனால் வாசியானது மேல்நோக்கி உள்புகுந்து தண்டுவடத்தின் வழியாக ஏறும் பார் அதில் சுடர்க்கம்பம் என்று கூறப்படும் சுழிமுனை நாளத்தினை கண்டால் அதில் ஐந்து ஓட்டைகள் தோன்றும் அதன் வழியாக கமலமாகிய அண்டத்துள்ளே சென்று அமுர்தத்தில் வாசிசிக்கும் அப்போது வெப்பநிலை அதிகரிக்கும்.
அதிகமென்ற அக்கினியோ கதிரோகோடி
ஐயையோ கண்ணிமைக்குள் அடங்குமோசொல்
பதிகமென்ற விந்துவைத்தான் வாசிதானும்
பாம்பரம் போல்சுத்தியல்லோ மணிபோல்பண்ணும்
அதிகமென்ற விந்துமணி சாரனையே செய்ய
காட்டுகிறேன் புலத்தியனே கருதிக்கேளு
அதிகமென்ற நுனிநாக்கை யனுப்போல் நீக்கி
உருண்டுவரும் மணியுடணே வாசிபாரே
                                :- அ-ரசக்குளிகை -14-9
இந்த யோகத்தினால் கோடிசூரியஒளி உண்டாகும் அது நமது கண்ணுக்குள் அடங்குமோ இதில் வாசியானது விந்துவை பம்பரம்போல் சுத்தி மணி போல் செய்யும். அத்தகைய விந்து மணியை சாரணை செய்யவழி கூறுகிறேன் புலத்தியனே கேளு. நமது நுனி நாக்கை அன்னாக்கை ஒட்டியுள்ள தமர் வாசலை அடைத்து அனுப்போல் திறந்து உருண்டு வரும் மணியுடன் வாசியை கவனி.
பாரப்பா விந்து மணி வாசிகூட
பட்ரென்றேஇறங்கிவிடும் பீஜத்துள்ளே
காரப்பா நந்தியுட வழியிற் செல்லும்
காணதற்க்குள் சுழண்டுமணி சிக்கிக் கொள்ளும்
ஆரப்பா அவ்விடத்தில் அக்கினியின் வீடு
அப்பவல்லோ அன்னாக்கைத் திறந்துமூடி
சேரப்பா நூற்றுஎட்டுதிரம் திறந்துமூடி
சிவந்துருகி வளமாகும் சாரனையாமென்னே
எனவே நூற்று எட்டு சாரனையுமாகும்.
                              அ-ரசக்குளிகை 14-10
இப்போது விந்து மணியானது வாசியுடன் சட்டென்று பீஜத்துள்ளே இறங்கிவிடும் பின் நந்தியின் வழியில் செல்லும் இதைப்பார் அதற்குள் மணி சுழண்டு சிக்கிக் கொள்ளும் அந்த இடமானது சுழுமுனையின் வீடாகும். அந்த நேரத்தில் நாக்கை திறந்து மூடி 108- தரம் செய்ய இது மணியின் 108- சாரனையாகும்
ஏருமடா அண்டத்தில் மணியின் வேகம்
உண்ணவே முனைநாக்கை அறைவாசிவாங்க
ஏறிவருங் கபாலத்தில் மனிதானப்பா
கண்டவுடன் அவ்விடத்தில் மணியைவைத்து
கபால வரை பெறுவாசல் மூடும்போது
நண்னவே சடலத்தை யுயரத்தூக்கி
நாலுரெண்டு வரை வரைக்கும் சொக்குவிக்கும்பாரே
                                 :- அ-ராசக்குளிகை- !4-11
அண்டத்தில் ( ஆயிரத்து எட்டு அண்டங்கள் என்று சொல்லப்படும் தலை உச்சியைக் குறிப்பதாகும் ) ஏறு மடா மணியின் வேகம் முனை நாக்கை உள்வாங்க தலையில் மணியானது ஏறிவரும் மணியதனை அவ்விடத்தில் வைத்து கபால பெருவாசலை மூடும்போது உடலை உய்ரத்தூக்கி மயக்கத்தை உண்டாக்கும்.
சொக்கவே அண்டமுதல் திசைகள்லெட்டும்
சுழண்டு வரும் நிமிசத்தில் மணியின்வேகம்
தாக்கவே முன்போலக் கதவைமூட
சனத்திலே கம்பு  நுனிமேலே செல்லும்
சிக்கென கதவு நுனி சற்றே நீக்கி
சனத்திலே யோடிவரும் மனிதானப்பா
காக்கவே ரசமணியின் மார்க்கஞ்சொன்னேன்
கண்டுகொள் இந்த நூல் தன்னிலாமே
                             :- அ-ரசக்குளிகை-14-12
இவ்வாறு மனமானது மயங்கி திசைகள் எட்டும் சுற்றி வரும்போது மீண்டும் முன்போல் கதவைமூட தண்டுவடத்தில் உள்ள சுழுமுனை நாடியின் நுனி மேல் செல்லும் ரசமணிதனை கதவு நுனி சற்றே நீக்கி காக்கவும் இதுவே ரசமணியின் வழியாகும்.
ஆமென்ற ரசமணியின் வேகத்தாலே
அண்டர்களும் முனிவர்களும் மயங்கினார்கள்
தேனென்ற இம்முரையைச் சொன்னதல்லாங்
உள்லொன்று வைத்ததிருக்கும் உலுத்தர்க்கும்
உற்பனமாயிம் முறையைச் சொல்வாரானால்
காணென்ற கழுதையுட சென்ம்மாகி
கடைப்பிறப்பாய் பிறந்திடுவார் கருதிப்பாரே
                                 :- அ-ரசக்குளிகை-14-13  
இவறிய ரசமணியின் வேகத்தால் முனிவர்களும் ஞானிகளும் மயங்கினார்கள் இத்தகைய சிறப்புக்கள் பொருந்திய மணியின் முறையினை மூடர்களுக்கும் வஞ்சகர்கள் போன்றவர்களுக்கும் இம்முறையை சொல்விரானால் கழுதையாகிய கடைசென்மாகிய பிறப்பை பிறந்திடுவர் என்றார் கூறுகிறார்.
பார்க்கவே இம்முறையைச் சொன்னால்
பாழான நரகமெய்தும் பாரு பாரு
கார்க்கவே சீஷனுட மனத்தைக் கண்டு
கைமுறையாய் சொல்லிவிட்டு ஞானமார்க்கம்
ஏற்கவே ரசமணியின் மார்க்கந்தாணும்
என்மக்காள் சொல்லிவிட்டேன் மோட்ச மார்க்கம்
சேர்க்கவே இம்முறையை யுனக்குங் சொன்னேன்
செழுங் கருனைபதி நாவில் கசடரமுற்றே
இந்த ரசமணியின் முறையை தகுதியற்றவர்களிடம் சொல்வாயானால் நரகம் செல்வாய் சிஷ்யனின் குணம்,மனம் கண்டு இந்த ஞானமார்க்கத்தை சொல்லிவிடு இதனால் மோட்சம் உண்டாகும். இது வரை அகத்தியரின் ரசக்குளிகை என்ற ரசமணி பற்றிய பாடல் தொகுப்பு -14 லில் இருந்து அறிந்தீர்கள் இனி திருமூலரின் திருமந்திரம் -3000 த்தில் இரண்டாம் பாகம் -130 பக்கம் – 1242- பாடலினினையும் சுப. அண்ணாமலை அவர்களின் கருத்துரையினையும் பார்க்கவும்.





















திருமந்திரம் பாடல் :-
ஏரொளிச் சக்கரம்—பிரசாதயோகம் :-
ஏர் ஒளி உள்எழு தாமரை நால் இதழ்
ஏர் ஒளி விந்துவினால் எழும்நாதமாம்
ஏர் ஒளி அக்கலை எங்கும் நிறைந்தபின்
ஏர் ஒளிச் சக்கரமாம் நடுவன்னியே

கருத்து :- ஏரொளிச் சக்கரம் என பொதுவாக கூறுகிறார். உடம்பினுள் மூலாதாரத்தில் உள்ள நான்கு இதழ்கள் உடைய தமரையில் குண்டலி உறைவதால் அது ஒளி உடையது அது மேல் நோக்கி எழும் இயல்புடையது. அச்சத்தியின் துணையால் சுக்கிலம் தீயாக மாற்றப்பட்டு ஆணை (ஆக்கினை) என்ற சக்கரம் வரை சென்று,பின்பு அது அருள் சக்த்தியின் துணையால், தலையில் நாதமாகவும் (ஒலி) விந்தாகவும் (ஒளி) எழும். அது பிரணவம் ஆகிய யோகமாகும். இதிலும் சுக்கிலம் பற்றியே கூறப்பட்டதை கவனிக்கவும்.
முடிவுரை :-
___________________________________________________________________________

இதுவரை சித்தர்களின் ரசமணி என்ற பெயர் சூட்டி நம்முடலில்யோக நிலையில் ஏற்ப்படும் நிகழ்வுகள் பற்றி அறிந்தீர்கள். மாந்தனின் வாழ்நாள் நீட்டிக்கும் ஆசையின் விளைவு அல்லது நாம் யார் நம்மை இயக்குவது எது என்று அரிய முற்பட்டதின்  விளைவுகள், அக்காலக்கட்டத்தில் ஞானிகள் என்றும் சித்தர்கள் என்றும் சொல்லப்படும் சிந்தனையாளர்களின் கருத்து முடிபுகலாகும். இவை ஒவ்வொரு மனிதனின் தன் உணர்வால், அனுபாவத்தால் மட்டுமே அறியக்கூடிய செயலாகும். இதனை விஞ்ஞான வழிகளில் சொல்வது அல்லது வெளிப்படுத்துவது இயலாது. நாம் ஐம்புலன்கள் என்று சொல்லப்படும் கண், காது, மூக்கு, வாய், உடல் (தொடுஉணர்வு) போன்ற நம் உடலின் ஐந்து இந்திரியக் கருவிகளின் வெளிப்பாடுகளைக் கொண்டே அனைத்தும் நிர்ணயிக்கப்படுகிறது. கண் எதைப்பார்க்கிறதோ அதற்குப் பொருள் என்று பெயர். இந்தப் பொருளே மனிதனாக, மிருகமாக, பறவையாக, மரமாக, உலோகமாக, உலகமாக, சூரியனாக, சந்திரனாக, காற்றாக, இருக்கலாம். இந்தப் பொருள்களின் அசைவுகளின் மூலமாக உரசல், மோதல் போன்ற காரணங்களால் ஒலி ஏற்படுகிறது இது நம் காதுகளை அடைந்து சத்தமாக,நாதமாக கேட்கப்படுகிறது. அடுத்து மூக்கு என்னும் கருவியாகும் இதன் மூலம நமக்கு சந்தன மனம், மல்லிகை மனம், வீட்டில் சமையலறையில் இருந்து வரும் வாசனைகள் நாசி (மூக்கு) என்ற கருவியால்  அறியப்படுகிறது. இனி வாய் என்ற கருவியாகும் இதன் மூலம் இனிப்பு, காரம், புளிப்பு, என்று சுவைகள் அறியப்படுகிறது இதன் மூலம் அது என்ன பொருள் என்பதை தீர்மானிக்கலாம். இதற்கடுத்து உடல் என்னும் கருவியாகும் இதன் தொடு உணர்வால் அறியப்படுகிறது, லேசான காற்று அடிக்கிறது ஆக தென்றல் காற்று என்று உணர்கிறோம். வெப்பம், மின்னதிர்ச்சி, குளிர், போன்றவைகளை உணர்வால் அறியப்படுகிறோம் ஆனால் இவைகளை பார்க்கப்படுவது இல்லை இருந்தும் இவை இக்கருவிகளின் வாயிலாக அறியப்பட்டு நிர்ணயிக்கப் படுகிறது இவையெல்லாம் உலகின் எல்லா உயர்திணைப் பொருள்களும் அரிய முடியும். ஆனால் நம் உள்ளுணர்வால் அறியப்படும் சில செயல்கள் பிறருக்கு தெரியாது. நாம் தூக்கத்தில் கணவுகான்கிறோம் இது பிறரால் அறியப்படுவது இல்லை. இச்செயல் மனத்தளவில் நிகழும் காரியமாகும். இதே கனவை பிறர் உணரச் செய்ய வல்லவரானால் அவர் எதோ சக்தி நிறைந்த வராக கருதப்படுகிறார் இதை மெஸ்மரிசம், ஹிப்னாடிசம் என்கிறனர் இதைப் பயிற்சியால் நடைமுறைப் படுத்தலாம். இத்தகைய மனக் கவர்ச்சியே அல்லது உள்ளுணர்வே மேற்கண்ட இராசக்குளிகையின் செயலாகும். இவைபற்றி எல்லாம் விரிவாக நாம் கற்பம், முப்பு போன்றவற்றை விவரித்தபின் சித்தர்களின் கடவுள் நிலையில் விரிவாக பார்க்கலாம். 

1 comment: